புதுடெல்லி: தமிழக சட்டசபையின் சிறப்புரிமை தொடர்பான சுமார் 20 ஆண்டுகள் பழமையான வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. 2003-ம் ஆண்டு தமிழக சட்டசபை நிறைவேற்றிய தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த வழக்கு, சட்டசபையின் சிறப்புரிமைக்கும் பத்திரிகை சுதந்திரத்துக்கும் இடையிலான அரசியலமைப்பு தொடர்பான கேள்விகளை எழுப்பியது.
அப்போது ‘தி இந்து’ நாளிதழில் வெளியான கட்டுரை தொடர்பாக சட்டசபை சிறப்புரிமை மீறல் தீர்மானத்தை நிறைவேற்றியது. இதையடுத்து நாளிதழின் மூத்த பத்திரிகையாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். கைது நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த விவகாரத்தின் அரசியலமைப்பு முக்கியத்துவம் காரணமாக வழக்கு முதலில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கும் பின்னர் 7 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வுக்கும் சென்றது. சட்டசபை சிறப்புரிமை மற்றும் கருத்து சுதந்திரம் தொடர்பான பல முக்கிய கேள்விகள் இதில் எழுந்தன.
ஆனால், 2004-ம் ஆண்டிலேயே தமிழக சட்டசபை தனது 2003-ம் ஆண்டு தீர்மானத்தைத் திரும்பப் பெற்றிருந்தது. இந்த தகவல் உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு நீண்ட காலத்துக்குப் பிறகே வந்தது. இதனால் தற்போது அந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்று நீதிமன்றம் கருதியது.
இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அதேநேரத்தில், சட்டசபை சிறப்புரிமை மற்றும் கருத்து சுதந்திரம் தொடர்பான அரசியலமைப்பு கேள்விகளுக்கு இந்த உத்தரவு இறுதி தீர்வாக அமையாது என்றும், எதிர்காலத்தில் பொருத்தமான வழக்கில் அவை பரிசீலிக்கப்படலாம் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
