புதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் பதவி விலகலை வலியுறுத்தி டெல்லி மற்றும் மும்பையில் எதிர்க்கட்சிகள் மற்றும் இளைஞர் அமைப்புகள் நடத்திய போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக முறைகேடுகள் நடைபெற்றதாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இதனை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. போலியான, இரட்டைப் பதிவுகள், இறந்தவர்களின் பதிவுகள் மற்றும் தகுதியற்ற பதிவுகளை நீக்குவதற்காகவே நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமையும் டெல்லியில் போராட்டக்காரர்கள் பேரணியாக செல்ல முயன்றபோது போலீசார் பலரை தடுத்து கைது செய்தனர். மும்பையிலும் ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரே உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த விவகாரம் வரும் நாட்களில் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
