போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் செப்டிக் டேங்கில் இருந்து 4 உடல்கள் மீட்கப்பட்டன. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக சிங்ராலி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஷிவ்குமார் வர்மா கூறியதாவது:
மத்தியப் பிரதேசத்தின் சிங்ராலி மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் செப்டிக் டேங்கில் இருந்து 4 உடல்கள் மீட்கப்பட்டன. இது பல கொலைகளின் வழக்காக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.
இந்த வீடு மாவட்ட தலைநகரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள பார்கவான் காவல் நிலைய எல்லைக்குள் உள்ளது. செப்டிக் டேங்கில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக உள்ளூர்வாசி ஒருவர் போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் டேங்கில் கிடந்த 4 உடல்களை மீட்டனர்.
இறந்தவர்களில் ஒருவர் வீட்டு உரிமையாளர் ஹரிபிரசாத் பிரஜாபதியின் மகன் சுரேஷ் பிரஜாபதி (30). மற்றொருவர் கரண் ஹல்வாய் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்ற இரண்டு உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
முதல்கட்ட விசாரணையில், சுரேஷ் மற்றும் கரண் ஆகியோர் தங்கள் நண்பர்களுடன் ஒரு விருந்துக்கு ஜனவரி 1-ம் தேதி வீட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் வளாகத்தில் கொல்லப்பட்டு உடல்கள் செப்டிக் டேங்கில் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். மேலும் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது என தெரிவித்தார்.
செப்டிக் டேங்கில் 4 உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் அந்தபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.