ஆமதாபாத்: காஷ்மீர் வாலிபர் சிக்கினார்… ஆன்லைனில் அறிமுகமான பாகிஸ்தான் பெண்ணை சந்திக்க புறப்பட்ட காஷ்மீர் வாலிபரை குஜராத் போலீசார் மடக்கினர்.
ஜம்மு காஷ்மீர், பந்திபோரா மாவட்டத்தில் வசித்து வந்தவர் இம்தியாஸ் ஷேக். இவருக்கு வயது 36. இவர் ஆன்லைன் வாயிலாக பெண்களிடம் பேசி வந்துள்ளார். அப்போது பாகிஸ்தான் முல்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆன்லைனில் நண்பராகி உள்ளார்.
நாளடைவில் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. காதலியை நேரில் சந்திக்க வேண்டும் என்று இம்தியாஸ் ஷேக்கிற்கு எண்ணம் வந்துள்ளது. எல்லை கடந்து பாகிஸ்தான் பெண்ணை சந்திக்க திட்டம் திட்டினார்.
குஜராத் மாநிலம், கட்ச் எல்லை வழியாக பாகிஸ்தானுக்குள் நுழைய முடியும் என்று நம்பிய இம்தியாஸ், அதிகாரிகளிடமிருந்து அதிகாரப்பூர்வ அனுமதியைப் பெற உள்ளூர்வாசிகளிடம் உதவி கோரினார். இருப்பினும், அவர் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்குள் போலீசார் அவரை தடுத்து நிறுத்தியதால் அவரது திட்டம் முறியடிக்கப்பட்டது.
இம்தியாஸ் குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள கவ்டா கிராமத்திற்கு எல்லையை கடக்க வந்தார். ஆனால் அவரை குஜராத் போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து குஜராத் மாநில போலீசார் கூறியதாவது: ஷேக் எல்லையைத் தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழையும் நம்பிக்கையில் கவ்டா கிராமத்திற்கு வந்தார். காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானுக்குப் பயணம் செய்வது அவருக்கு சாத்தியமில்லை என்பதால் இங்கு வந்துள்ளார்.
சட்டப்பூர்வமாக பாகிஸ்தானுக்குள் நுழைய அதிகாரிகளிடம் அனுமதி பெற கிராம மக்களிடம் உதவி கோரியுள்ளார். கிராம மக்கள் எச்சரித்தும் அவர் கேட்கவில்லை. தற்போது அவரை கைது செய்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.