புதுடெல்லி: அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து தமிழகத்தில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். பிரபல ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த சிறப்பு பேட்டியில், “தமிழகத்தில் ஆட்சியில் உள்ள திமுக அரசு ஊழல் மட்டுமே செய்து வருகிறது. இதன் காரணமாக, அந்த மாநில இளைஞர்கள் வெளியேறி வருகின்றனர். தொழில்களும் அங்கிருந்து வெளியேறி வருகின்றன” என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “தென்னிந்தியாவில் ஒரு காலத்தில் தமிழகம் முற்போக்கான மாநிலமாகக் கருதப்பட்டது. ஆனால், திமுக அரசின் தவறான கொள்கைகளால், தற்போது அது தடுமாறி குழப்பத்தை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக, பொதுமக்கள் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளனர். வரும் தேர்தல்களில் அங்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைக்கப்படும்.”
“தமிழில் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளை அறிமுகப்படுத்தாமல், திமுக தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுகிறது. இந்தப் படிப்புகளை தமிழில் கற்பிக்க வேண்டும் என்று நான் திமுகவிடம் சொன்னேன். ஆனால் அவர்கள் அதைச் செயல்படுத்தவில்லை” என்று அவர் கூறினார்.
மேலும், “தேசிய கல்விக் கொள்கையின்படி, தொடக்கக் கல்வியை தாய்மொழியில் கற்பிக்க வேண்டும். மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை சேர்க்கையின் போது நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வு 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. ஆனால் திமுகவின் எதிர்ப்பால், இந்தத் தேர்வு தமிழில் நடத்தப்படுவதில்லை” என்று அமித் ஷா கூறினார்.
தொடர்ந்து, “திமுக 5 ஆண்டுகளாக ஊழலில் ஈடுபட்டுள்ளது. இப்போது அவர்கள் திடீரென்று அதை மீறுகிறார்கள். எல்லை நிர்ணயம் தீர்மானிக்கப்படும்போது, யாருக்கும் அநீதி இழைக்கப்படாது. அநீதி நடக்க 0.01 சதவீதம் கூட வாய்ப்பில்லை” என்று அவர் கூறினார்.
பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. சரியான நேரம் வரும்போது அதை அறிவிப்போம் என்றார்.