பெங்களூரு: கடந்த 40 நாட்களில், கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் 45 வயதுக்குட்பட்ட 23 பேர் மாரடைப்பு காரணமாக திடீரென இறந்தனர். இதேபோல், கதக் மாவட்டத்தில் 20 பேர் மாரடைப்பால் திடீரென இறந்தனர். இந்த விவகாரத்தை விசாரிக்க கர்நாடக அரசு 10 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளது.
மருத்துவ நிபுணர் குழு தனது அறிக்கையை சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவிடம் சமர்ப்பித்தது. அதைப் பெற்ற பிறகு, தினேஷ் குண்டுராவ் கூறியதாவது:- கொரோனா தொற்று பரவிய பிறகு மாரடைப்பு சற்று அதிகரித்துள்ளது என்பதை அறிக்கை உறுதிப்படுத்துகிறது. அதே நேரத்தில், இந்த விளைவு கொரோனா தடுப்பூசியால் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் அதிகமாகக் காணப்படுகிறது. திடீர் மாரடைப்புக்கு இதுவும் ஒரு காரணம் என்று அறிக்கை கூறுகிறது.
இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பதைத் தடுக்க, மருத்துவமனைகள் அல்லாத பிற இடங்களில் மாரடைப்பால் ஒருவர் இறந்தால் கட்டாயமாக பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அப்போதுதான் மரணத்திற்கான சரியான காரணம் தெரியவரும். அதனால்தான் அந்த முடிவு எடுக்கப்பட்டது. இவ்வாறு தினேஷ் குண்டு ராவ் கூறினார்.