திருப்பூர் : பி.ஏ.பி., நீர்நிலைகள் நிரம்பி வரும் நிலையில், நீர் மேலாண்மை பற்றாக்குறையால், பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியாமல், உபரிநீர் கேரளாவுக்கு திறந்து விடப்படுவதாக, பி.ஏ.பி., விவசாயிகள் கண்ணீர் விடுகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், கோவையில் பரம்பிக்குளம், ஆழியாறு பாசனத் திட்டத்தின் (பிஏபி) மூலம் 3.77 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். இதில் திருப்பூர் மாவட்டம் காங்கயம், வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள 48,000 ஏக்கர் விவசாய நிலம் இந்த பாசன நீரை நம்பி உள்ளது. நூற்றுக்கணக்கான விவசாயிகள் பயனடைகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பரம்பிக்குளம், துணைக்கடவு, பெருவாரிப்பள்ளம் உள்ளிட்ட பிஏபி நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது.
காண்டூர் கால்வாய் பராமரிப்பில் தாமதம்
இதனிடையே, காண்டூர் கால்வாயில் சிறு பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன; இப்பணியை விரைந்து முடிக்காததால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ‘பணிகளை விரைந்து முடித்து, பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும்’ என, பாசனநீரை பயன்படுத்தும் பல்வேறு விவசாய சங்கங்கள், பி.ஏ.பி., வலியுறுத்தி வருகின்றன.
பி.ஏ.பி., வெள்ளக்கோவில் கிளை கால்வாய் (காங்கயம் – வெள்ளக்கோவில் கிளை) நீர் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி கூறுகையில், ”பருவ மழையால், பி.ஏ.பி., நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது. காண்டூர் கால்வாய் சீரமைப்பை நிறுத்தி பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை.
இதனால் சோலையாறு, துணைக்கடவு அணைகளில் இருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கேரள அரசு ஏற்கனவே கனமழையால் வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறது. பி.ஏ.பி., அதிகாரிகளின் தவறான நீர் மேலாண்மையால், பாசனத்திற்கு பி.ஏ.பி.,க்கு தண்ணீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தண்ணீர் கிடைக்கவில்லை
இந்த நீரை நம்பியிருக்கும் கால்வாயில் இருந்து வெளியேறும் திருப்பூர் மாவட்டம், பல்லடம், பொங்கலுார், சுல்தான்பேட்டை, உடுமலைப்பேட்டை, குண்டடம், காங்கயம், வெள்ளக்கோவில் உள்ளிட்ட பகுதிகளில், கடும் வறட்சி நிலவி வருகிறது; கால்நடைகளுக்கும் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. பாசனத்திற்கு தண்ணீர் இருந்தாலும், செயற்கையாக வறட்சி நிலவுகிறது. இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.