ஸ்ரீ காளஹஸ்தி: பஞ்சபூத கோயில்களில் வாயு ஸ்தலமாக கருதப்படும் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அப்போது, கோவில் அருகே உள்ள பக்த கண்ணப்பர் கோவிலில், பக்தர்களுக்கு முதல் மரியாதை செலுத்தும் வகையில், முதல் கொடியேற்றம் நடக்கிறது.
இந்த நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. இதையடுத்து, காளஹஸ்தி சிவன் கோயிலில் சுவாமி சன்னதி எதிரே உள்ள தங்கக் கொடிமரத்தில் பிரம்மோற்சவக் கொடி சனிக்கிழமை ஏற்றப்பட்டது. தொடர்ந்து, வரும் 25-ம் தேதி வரை ராவண வாகனம், மயூரி வாகனம், சேஷ வாகனம், யாளி வாகன சேவைகள் நடக்கிறது. மகா சிவராத்திரியையொட்டி, வரும் 26-ம் தேதி நந்தி வாகன சேவையும், இரவு லிங்கோத்பவ தரிசனமும் நடக்கிறது. 27-ம் தேதி தேர் திருவிழா, இரவு தெப்போத்ஸவம், 28-ம் தேதி சுவாமி திருக்கல்யாணம், மார்ச் 1-ம் தேதி சபாபதி திருக்கல்யாணம் நடக்கிறது. 2-ம் தேதி சுவாமி கிரிவலம். 3-ம் தேதி கொடியிறக்க விழா நடக்கிறது.