டெல்லி: கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களின் விலை குறைப்பு குறித்து விளம்பரப்படுத்த உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் செப்டம்பர் 22 முதல் ஜிஎஸ்டி வரியில் மாற்றம் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆட்டோமொபைல் துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இரு சக்கர வாகனங்கள் (350 சிசி வரை), சிறிய கார்கள், 10 பேர் வரை அமரக்கூடிய மினி பேருந்துகள் மற்றும் வணிகப் பொருட்கள் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதனால், செப்டம்பர் 21-க்குப் பிறகு ஆட்டோமொபைல் உபகரணங்களின் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், 1500 சிசிக்கு மேல் உள்ள கார்களுக்கும், 4 மீட்டருக்கு மேல் நீளமுள்ள உயர் ரக கார்களுக்கும் 40% வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் SUV, MUV, MPV, XUV ஆகியவை அடங்கும்.

இதற்கிடையில், GST குறைப்பு காரணமாக கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களின் விலைகள் கணிசமாகக் குறைய உள்ள நிலையில், மத்திய அரசு புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதாவது, GST குறைப்பு காரணமாக கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களின் விலை எவ்வளவு குறையும் என்பதைக் குறிக்கும் விலைப் பட்டியலை தங்கள் கடைகளின் முன் விளம்பரப்படுத்துமாறு கார் மற்றும் இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் கூடிய சுவரொட்டிகளை ஒட்ட வேண்டும் என்றும் அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கையில் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.