பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த 2020-21-ம் ஆண்டில், கொரோனா தொற்றுநோய்களின் போது பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இதில் அப்போதைய முதல்வர் எடியூரப்பாவுக்கும், சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு சித்தராமையா முதல்வராக பதவியேற்ற பிறகு, இதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தலைமையில் கமிஷன் ஒன்றை அமைத்தார். இந்த ஆணையம் கடந்த ஓராண்டாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் அறிக்கையை சமர்ப்பித்தது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் நேற்று கூறியதாவது:- நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்ஹா கமிஷன் அறிக்கையில், கரோனா தடுப்பு கருவிகள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது ஆதாரத்துடன் கண்டறியப்பட்டுள்ளது. இதில் அப்போதைய முதல்வர் எடியூரப்பாவுக்கும், சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய பரிந்துரை செய்துள்ளது.
கொரோனா பாதுகாப்பு கவசங்கள் கொள்முதலில் அரசுக்கு நேரடியாக ரூ.14 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. முதல் அறிக்கையின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது. முன்னாள் முதல்வர் எடியூரப்பா, முன்னாள் அமைச்சர் ராமுலு ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்ஹா தனது விரிவான அறிக்கையை 6 மாதங்களில் சமர்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து நீதிபதி குன்ஹாதான் பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.