நீதிமன்ற உத்தரவின்படி, லோக் ஆயுக்தா எஸ்.ஐ.டி., ஏ.டி.ஜி.பி., சந்திரசேகர் மீது பொய் வழக்கு போட்டு மிரட்டியதாக அளித்த புகாரின் பேரில், மத்திய அமைச்சர் குமாரசாமி, அவரது மகன் நிகில் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
லோக்ஆயுக்தா எஸ்.ஐ.டி., ஏ.டி.ஜி.பி., சந்திரசேகர், கர்நாடக கவர்னர் தவர்சந்த் கெலாட்டுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், ‘மத்திய அமைச்சர் குமாரசாமி முதல்வராக இருந்தபோது, விதிகளை மீறி, சாய் மினரல்ஸ் நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்கினார். விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த கடிதம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு பதிலளித்த குமாரசாமி, ‘என்னை ஒருமுறையாவது சிறையில் அடைக்க முயற்சிக்கிறார். அவருக்குப் பின்னால் இருப்பது யார்?’ என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து தனது துறை ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில், சந்திரசேகர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவின் வரியை குறிப்பிட்டு, குமாரசாமியை பன்றிக்கு ஒப்பிட்டார். இதையடுத்து சஞ்சய் நகர் போலீசில் கடந்த அக்டோபர் 11ம் தேதி சந்திரசேகர் புகார் அளித்தார்.
குமாரசாமி மற்றும் அவரது மகன் நிகில் ஆகியோர் தவறான மருத்துவ ஆவணங்களை சமர்ப்பித்து, நான் கர்நாடக கேடரில் தொடர்வதாகவும், லஞ்சம் பெற்றதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். குமாரசாமி என்னை கர்நாடக கேடரில் இருந்து வேறு மாநிலத்திற்கு மாற்றுவதாக வாய்மொழியாக மிரட்டினார்.
அவரது நெருங்கிய நண்பரான சுரேஷ் பாபு, தலைமைச் செயலாளரிடம் என் மீது பொய் புகார் அளித்துள்ளார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புகாரின் பேரில் போலீசார் சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதை எதிர்த்து, ஏடிஜிபி சந்திரசேகர், நகரின் 42வது கூடுதல் முதன்மை பெருநகர நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு மீதான விசாரணை பெருநகர நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, சம்பந்தப்பட்ட மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதையடுத்து, எஸ்ஐடி-ஏடிஜிபியின் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முதல் எதிரியாக குமாரசாமியும், 2வது எதிரியாக நிகில் குமாரசாமியும், மூன்றாவது எதிரியாக சுரேஷ் பாபுவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ளதால், அதிகாரி அளித்த புகாரின்படி விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, வாக்குமூலம் பதிவு செய்வோம்’ என, உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.