புதுடெல்லி: எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு மே 5ம் தேதி நடந்தது.தேர்வுக்கு ஒரு நாள் முன்னதாக பீகார் தலைநகர் பாட்னாவில் வினாத்தாள் கசிந்தது.
அதேபோல் ஜார்கண்ட், குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உ.பி. மற்ற மாநிலங்களிலும் முறைகேடுகள் நடந்தன. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. தேர்வு எழுத தாமதமான 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது. அந்த மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டன. 1,563 தேர்வர்களில் 813 பேர் மறுதேர்வு எழுதினார்கள். அவர்களுக்கான முடிவுகள் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதே நேரத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கூடாது என்று குஜராத்தைச் சேர்ந்த 56 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு வரும் 8ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இதற்கு முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய கல்வித்துறை புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: நீட் நுழைவுத் தேர்வில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெறவில்லை. சில மாநிலங்களில் ஆள்மாறாட்டம் மற்றும் முறைகேடுகள் நடந்துள்ளன. தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வில் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வினாத்தாள் கசிவை தடுக்க கடுமையான சட்டம் அமல்படுத்தப்பட்டது. நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.