புதுடெல்லி: இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு அடுத்த மாதம் 4-ம் தேதி நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 550-க்கும் மேற்பட்ட நகரங்களிலும், 5000 மையங்களிலும் நீட் தேர்வு நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு நீட் தேர்வில் வினாத்தாள் மோசடி, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், இந்த முறை முறைகேடுகள் நடக்காமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நீட் தேர்வு சுமூகமாகவும், நேர்மையாகவும், பாதுகாப்பாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கலெக்டர்கள் மற்றும் எஸ்பிகளுடன் தொடர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்வு மையங்களில் தற்போதுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், மாவட்ட காவல்துறையினரால் பல அடுக்கு சோதனையும் இருக்கும். வினாத்தாள் மற்றும் விடைத்தாள்கள் முழு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும். தேர்வின் போது பயிற்சி மையங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் முழுமையாக கண்காணிக்கப்படும். அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர், எஸ்.பி.க்கள் நேரில் ஆய்வு செய்வார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.