திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் கேரளா தீவிர வறுமை ஒழிப்பு மாநிலமாக அறிவிக்கும் விழா நடைபெற்றது. அதற்கான அறிவிப்பு அறிக்கையை முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டார்.
கேரளாவின் 69-வது உதய தினத்தை முன்னிட்டு சட்டசபையில் ஒரு நாள் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு முதல்வர் பினராயி விஜயன் தலைமை தாங்கி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவிலேயே தீவிர வறுமை ஒழிப்பை அறிவித்த முதல் மாநிலம் என்பதில் பெருமிதம் கொள்வோம். மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கம் என்பது ஒரு நூற்றாண்டுக்கு முன்பே தேசிய இயக்கத்தால் எழுப்பப்பட்டது. இருப்பினும், சுதந்திரத்துக்கு பிறகு ஆரம்ப நாட்களில் இது நடக்க நீண்ட போராட்டம் தேவைப்பட்டது. இந்த போராட்டங்களின் விளைவாக ஐக்கிய கேரளா உருவாக்கப்பட்டது. இன்று ஐக்கிய கேரளா என்ற மலையாளிகளின் கனவு நனவாகி 69 ஆண்டுகள் கடந்து விட்டன.
ஒவ்வொரு கேரள உதய தினத்தையும் நாம் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். ஆனால் இந்த ஆண்டு கேரள உதய தினம் ஒட்டுமொத்த கேரள மக்களுக்கும் ஒரு புதிய சகாப்தத்தின் பிறப்பிடமாகும். ஏனென்றால் கேரளாவை தீவிர வறுமை இல்லாத முதல் மாநிலமாக மாற்ற முடிந்தது.
பல வரலாற்று சிறப்புமிக்க சட்டங்கள் மற்றும் கொள்கை அறிவிப்புகளை கண்ட சட்டமன்றம் இது. புதிய கேரளாவை உருவாக்குவதில் மற்றொரு மைல்கல்லை எட்டவிருக்கும் வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில் இந்த சட்டமன்றம் கூடுகிறது. அந்தவகையில் தீவிர வறுமை ஒழிப்புக்காக கேரளா ரூ.1,000 கோடிக்கு மேல் செலவிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதைதொடர்ந்து திருவனந்தபுரத்தில் கேரளா தீவிர வறுமை ஒழிப்பு மாநிலமாக அறிவிக்கும் விழா நடைபெற்றது. அதற்கான அறிவிப்பு அறிக்கையை முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டார். அதனை நடிகர் மம்முட்டி பெற்று கொண்டார். இதில் மந்திரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.