இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவலாகும் சூழல் உருவாகியுள்ளது. ஒரே வாரத்தில் பாதிப்பு 4 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சீனாவிலும், சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளிலும் தொற்று மீண்டும் உயர்ந்த நிலையில் உள்ளது. இந்தியாவில் தற்போது 1,010 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அவர்களில் 752 பேர் அண்மையில் தொற்றுக்குள்ளானவர்கள்.அதிகபட்சமாக கேரளாவில் 430 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் 210 பேர், டெல்லியில் 104 பேர், தமிழ்நாட்டில் 69 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய திரிபுகளான NB.1.8.1 மற்றும் LF.7 ஆகியவை சில இடங்களில் பரவத் தொடங்கிய நிலையில், இதனால் அச்சம் தேவையில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த வாரம் 35 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய எண்ணிக்கை 3 ஆக குறைந்துள்ளது. இது குறித்தான அறிவுறுத்தல்களை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பொது சுகாதாரத் துறை வழங்கியுள்ளது.மக்கள் அதிகம் கூடும் திருவிழாக்கள் மற்றும் கண்காட்சிகளில் வழங்கப்படும் உணவுகள், குடிநீர் போன்றவையின் சுகாதார நிலையை அதிகாரிகள் கவனிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அதிகம் திரளும் இடங்களில் கழிப்பிட வசதிகள் மற்றும் சுத்தமான குடிநீர் கிடைக்க வேண்டும் எனவும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.அதிக மக்கள் கூடும் நிகழ்வுகளில் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையே அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.இந்நிலையில், மக்களிடையே மீண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் அவசியமாகின்றன.