மும்பை: கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை செயல்பட அனுமதிக்கும் திட்டம் எதுவும் ரிசர்வ் வங்கியிடம் இல்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: கார்ப்பரேட் நிறுவனங்களை வங்கிகளை நடத்த அனுமதிப்பது முரண்பாடான முடிவாக இருக்கும். இந்த நிறுவனங்கள் தங்கள் சொந்த நலன்களுக்காகவும், அவர்களால் கோரப்பட்டவர்களுக்காகவும் மட்டுமே செயல்பட வாய்ப்புகள் அதிகம். உலகில் இது சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகள் இதுபோன்ற பிரச்சினைகள் இருப்பதை நிரூபித்துள்ளன.
எனவே, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து ரிசர்வ் வங்கி தற்போது பரிசீலிக்கவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களை கண்காணித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துவது மிகவும் கடினமான செயலாகும். இதில் உள்ள அபாயங்கள் அதிகம். வங்கிகள் மற்ற வணிகங்களை விட வித்தியாசமாக செயல்படுகின்றன.
நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைய போதுமான வளங்கள் தேவைப்பட்டாலும், வங்கிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டும் தீர்வாகாது.
எண்ணிக்கையை விட வளமான, வலுவான மற்றும் நன்கு நிர்வகிக்கப்படும் வங்கிகள் நாட்டின் முன்னேற்றத்திற்கு அவசியம். வங்கிகளுக்கு உரிமம் வழங்குவது எளிமையாக்கப்பட்டுள்ளது. பல்வேறு சேவைகளை வழங்க உரிமம் பெற விரும்பும் வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்து உரிமம் பெறலாம். கார்ப்பரேட் நிறுவனங்களை கண்காணித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துவது மிகவும் கடினமான செயலாகும். இவ்வாறு கூறினார்.