டெல்லி: மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் மார்ச் 21-ம் தேதி அமலாக்க இயக்குனரகம் கைது செய்தது.
விசாரணை நீதிமன்றம் அவருக்கு வழங்கிய ஜாமீனை டெல்லி உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதையடுத்து, திகார் சிறையில் இருந்த கெஜ்ரிவாலை, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், ஜூன், 26-ல், சி.பி.ஐ., கைது செய்தது.
ஜூலை, 12-ல், அமலாக்க இயக்குனரகம் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம், கெஜ்ரிவாலுக்கு, இடைக்கால ஜாமின் வழங்கியது. ஆனால், சிபிஐ வழக்கில் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சிபிஐ வழக்கில் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று அவர் காணொலி காட்சி மூலம் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா, வரும் 25-ம் தேதி வரை அவரது நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார். அதே நேரத்தில், ஆம் ஆத்மி எம்எல்ஏ துர்கேஷ் பதக் மற்றும் சில குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.