நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இதில் காங்கிரஸின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தற்போதைய எம்.பி. ராகுல் காந்தி, வெளிநாட்டு பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கு, நேருவால் துவங்கப்பட்ட ‘அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்’ (AJL) நிறுவனத்துடனும், அதன் மூலம் வெளியான ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையுடனும் தொடர்புடையது. இந்த பத்திரிகை 2008ஆம் ஆண்டு மூடப்பட்டது. அதன் பின்னணியில், காங்கிரஸ் கட்சிக்கு AJL நிறுவனம் ₹90 கோடி கடன்பட்டிருந்தது.
2010 ஆம் ஆண்டு, ‘யங் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனம் ₹50 லட்சம் செலுத்தி AJL-ஐ கைப்பற்றியது. இந்த நிறுவனத்தில் சோனியா மற்றும் ராகுல் காந்தி தலா 38 சதவீத பங்குகள் வைத்திருந்தனர். இதை சட்டவிரோதமாகும் எனக் கூறி பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்குத் தொடர்ந்தார். அவரது புகாரின் அடிப்படையில் சிபிஐ மற்றும் பின்னர் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது.
விசாரணையின் போது ₹2,000 கோடி மதிப்பிலான சொத்துகள் வெறும் ₹50 லட்சத்தில் பரிமாறப்பட்டதாகவும், இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாகவும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் அமலாக்கத்துறையால் நேரில் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். மேலும், வழக்குடன் தொடர்புடைய ₹700 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்தது.
தற்போது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் சோனியா மற்றும் ராகுல் காந்தி முதல் மற்றும் இரண்டாம் குற்றவாளிகள் என குறிப்பிடப்பட்டுள்ளனர். மேலும், சாம் பிட்ரோடா, சுமன் துபே உள்ளிட்ட பலரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்த நடவடிக்கையை எதிர்த்து, காங்கிரஸ் கட்சி நாளை ஏப்ரல் 16-ஆம் தேதி நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது.