‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை இயக்கிய விவேக் அக்னிஹோத்ரி, இப்போது ‘த பெங்கால் ஃபைல்ஸ்’ படத்தை இயக்கியுள்ளார். இதில் மிதுன் சக்ரவர்த்தி, அனுபம் கெர், தர்ஷன் குமார், பல்லவி ஜோஷி மற்றும் பலர் நடிக்கின்றனர். செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படம், 1946-ம் ஆண்டு மேற்கு வங்காளத்தின் நவகாளி மாவட்டத்தில் நடந்த மதக் கலவரங்களை அடிப்படையாகக் கொண்டது.
இதன் காரணமாக, இந்தப் படத்திற்கு மாநிலத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது. படத்தைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த சூழ்நிலையில், இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் கோரிக்கை விடுத்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், ‘தி பெங்கால் ஃபைல்ஸ்’ படத்தை தடை செய்யக்கூடாது என்றும், அதை அமைதியாகத் திரையிட அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

“இந்தப் படம் மேற்கு வங்கத்தில் தடை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அரசியல் அழுத்தம் காரணமாக படத்தைத் திரையிடுவதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் பயப்படுவதாகக் கூறுகிறார்கள். ஆகஸ்ட் 16 அன்று, படத்தின் டிரெய்லரை ஒரு ஹோட்டலில் வெளியிட முயற்சித்தோம். ஆனால் போலீசார் அதைத் தடுத்தனர். நீங்கள் இந்திய அரசியலமைப்பின் மீது சத்தியப்பிரமாணம் செய்துள்ளீர்கள்.
ஒவ்வொரு குடிமகனும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையைப் பாதுகாப்பதாகவும் நீங்கள் சத்தியப்பிரமாணம் செய்துள்ளீர்கள். இந்தப் படம் இந்திய தணிக்கை வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தப் படத்தை வெளியிடுவதற்குப் பொறுப்பேற்க வேண்டியது உங்கள் கடமை.”