தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் வாக்காளர்கள் பிரச்னைகள் குறித்து தங்களது ஆலோசனைகளை சமர்ப்பிக்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும், உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும் ஒன்றாக இருப்பது தெரியவந்தது.
இதை சுட்டிக்காட்டிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, போலி வாக்காளர்கள் இருப்பதாக குற்றம் சாட்டினார். இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இருவர் ஒரே வாக்காளர் அடையாள அட்டை எண் வைத்திருந்தாலும், அவர்களை போலி வாக்காளர்களாகக் கருத முடியாது. அவர்கள் இரு இடங்களிலும் வாக்களிக்க முடியாது. அவர்கள் தங்கள் வாக்குச் சாவடியில் மட்டுமே வாக்களிக்க முடியும் என்றாலும், இதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், மத்திய உள்துறைச் செயலர், சட்டச் செயலர், ஆதார் ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆகியோருடன் வரும் 18-ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். 2 வாக்காளர்களுக்கு ஒரே எண்ணை ஒதுக்குவதை தவிர்க்க வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் கட்டாயம் இணைப்பது குறித்து அப்போது விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
மேலும், அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளும் தீர்க்கப்படாத பிரச்னைகள் தொடர்பாக வாக்காளர் பதிவு அலுவலர்கள் (இஆர்ஓ), மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (டிஇஓ) அல்லது மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் (சிஇஓ) மட்டத்தில் தங்கள் ஆலோசனைகளை ஏப்ரல் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கேள்விக்குரிய வாக்காளர் அடையாள அட்டைகள் 2008 முதல் 2013 வரை வழங்கப்பட்டவை என்றும், அப்போது பாஜக ஆட்சியில் இல்லை என்றும் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியிருந்தது.