மகாராஷ்டிரா சட்டசபைக்கு நவம்பர் 20-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் நவம்பர் 23-ம் தேதி அறிவிக்கப்பட்டன. மாநிலத்தில் மொத்தமுள்ள 288 சட்டமன்ற தொகுதிகளில் 230 இடங்களில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ் கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்தது. இதைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
இதே குற்றச்சாட்டை முன்வைத்து, சட்டசபையில் நடந்த எம்எல்ஏக்களின் பதவியேற்பு விழாவையும் காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள் புறக்கணித்தனர். இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஒரு சட்டமன்றத் தொகுதியில் உள்ள 5 வாக்குச் சாவடிகளில் விவிபிஏடி சீட்டுகள் சரிபார்க்கப்படுகின்றன.

அதன்படி, மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நவம்பர் 23-ம் தேதி அறிவிக்கப்பட்டபோது, 1,440 விவிபிஏடி இயந்திரங்களின் சீட்டுகள் சரிபார்க்கப்பட்டன. இதில் எந்த பிழையும் காணப்படவில்லை. கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் விவிபிஏடி சீட்டுகள் சரிபார்க்கப்பட்டன. அனைத்து நிகழ்வுகளும் கேமராவில் பதிவாகியுள்ளன. மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.