திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்துள்ள திருமலை முதல் திருப்பதி செல்லும் மலைப்பாதையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வாகனங்கள் சென்றன. அப்போது மலைப்பாதையில் 7-வது மைல் அருகே வனப்பகுதியில் இருந்து திடீரென யானைக்கூட்டம் வந்தது.
இதை பார்த்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதுகுறித்து உடனடியாக தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த விஜிலென்ஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். யானைகளுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்றும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

செல்போனில் புகைப்படம் எடுப்பது, செல்ஃபி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. அவர்கள் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டனர். மேலும் வாகனங்கள் செல்லும் நடைபாதை அல்லது மலைப்பாதை வழியாக யானைகள் வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.