சண்டிகர்: மத்திய அரசை கண்டித்து பஞ்சாபில் விவசாயிகள் ஒரு நாள் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளனர். பஞ்சாப் விவசாயிகள் விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை சட்ட உத்தரவாதம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப் மற்றும் ஹரியானா எல்லையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இம்மாதம் 6 மற்றும் 8-ம் தேதிகளில் டெல்லி நோக்கி பேரணியாக செல்ல முயன்றபோது, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அவர்களின் பேரணி கைவிடப்பட்டது. மறுபுறம், மத்திய அரசை கண்டித்து 35-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடரும் விவசாயிகள் சங்க தலைவர் தள்ளேவாலின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. இந்நிலையில், பஞ்சாபில் இன்று விவசாயிகள் முழு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டம் மாலை 4 மணி வரை தொடரும். 200-க்கும் மேற்பட்ட இடங்களில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பஞ்சாப் பந்த் போராட்டத்தை முன்னிட்டு 150-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பஞ்சாபின் பல பகுதிகளில் விவசாயிகள் வாகனங்களை மறித்து போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பதற்றம் நிலவுகிறது. விவசாயிகள் சில இடங்களில் டிராக்டர் பேரணியும் நடத்தினர்.
போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இதற்கிடையில், முழு அடைப்பு குறித்து பேசிய விவசாயிகள் தலைவர் சர்வான் சிங் பந்தர், ‘விமான சேவைகள், மருத்துவ தேவைகள், திருமணம் தொடர்பான பயணம் அல்லது வேலை நேர்காணல் உள்ளிட்ட அவசர தேவைகள் பாதிக்கப்படாது’ என உறுதி அளித்துள்ளார்.