ஸ்ரீநகர்: 1947-ல் இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிக்கும் இந்துக்கள், ஜம்முவில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். 1960-ம் ஆண்டில், அவர்கள் ஜம்முவின் பல்வேறு பகுதிகளில் சுமார் 39 முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
ஆனால் சட்டப்பிரிவு 370 காரணமாக அவர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டனர். 2019-ல், பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் 370-வது பிரிவை ரத்து செய்தது. இதன் காரணமாக இந்து அகதிகளுக்கு நிரந்தர குடியுரிமை கிடைத்தது.
நடப்பு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர். மேற்கு பாகிஸ்தான் அகதிகள் நடவடிக்கை குழு நிர்வாகிகள் கூறியதாவது:-
கடந்த 1947-ம் ஆண்டு ஜம்முவில் 5,700-க்கும் மேற்பட்ட இந்து குடும்பங்கள் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து அகதிகளாக குடியேறினர். பஞ்சாப், டெல்லி மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் பல்வேறு குடும்பங்கள் குடியேறின.
பெரும்பாலான குடும்பங்கள் ஜம்முவின் கதுவா மற்றும் ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் தங்கியிருந்தன. 70 ஆண்டுகளுக்கும் மேலாக காஷ்மீரில் வாக்களிக்கும் உரிமை உள்ளிட்ட எந்த அடிப்படை உரிமையும் இல்லாமல் நாங்கள் வாழ்ந்தோம்.
2019-ம் ஆண்டு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகுதான் அரசின் அனைத்து நலத்திட்டங்களும் எங்களுக்குக் கிடைத்தன. அக்டோபர் 1-ம் தேதி நடைபெறவுள்ள காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலில் முதன்முறையாக வாக்களிக்க உள்ளோம். இதை பெரிய திருவிழாவாகக் கொண்டாடுகிறோம்.
எங்களுக்கு உயிர் கொடுத்த பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றி. இவ்வாறு அவர் கூறினார். தேஷ்ராஜ் கூறுகையில், “பிரிவு 370 காரணமாக நாங்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டோம். அந்தச் சட்டத்தின் மூலம் நாங்கள் 2-ம் தர குடிமக்களாக நடத்தப்பட்டோம்.
வீட்டு வசதி, வங்கிக் கடன் உள்ளிட்ட எந்த உரிமையும் எங்களுக்குக் கிடைப்பதில்லை. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகுதான் எங்களுக்கு எல்லா உரிமைகளும் கிடைத்தன. இப்போது அவர்களுக்கு வாக்குரிமை கிடைத்துள்ளது. இது எங்கள் வாழ்வில் மறக்க முடியாத தருணம்,” என்றார்.