நியூயார்க்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக சேர்ப்பதற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டாமர் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தற்போது 15 நாடுகள் மட்டுமே உள்ளன.
அதில் 5 நாடுகள் மட்டுமே ‘வீட்டோ’ அதிகாரத்துடன் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர்ந்து வரும் இந்தியாவை பாதுகாப்பு கவுன்சிலில் சேர்க்க வேண்டும் என பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், சீனா இதற்கு சம்மதிக்கவில்லை.
அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபையின் 79வது அமர்வில் உரையாற்றிய பிரான்ஸ் அதிபர் மேக்ரான், “ஐ.நா.வை இன்னும் சிறப்பாக செயல்பட வைக்க வேண்டும்.
ஜெர்மனி, ஜப்பான், இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளை நிரந்தர உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்” என்றார். பிரிட்டிஷ் பிரதம மந்திரி கெய்ர் ஸ்டாமரும் இதை ஆமோதித்து, பாதுகாப்பு கவுன்சில் அதிக நாடுகளைக் கொண்ட அமைப்பாக மாற வேண்டும் என்றார். தற்போது பாதுகாப்பு கவுன்சிலில் அதிக நாடுகளின் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன், இந்தியாவுக்கு அளிக்கப்படும் ஆதரவும் உறுதியாகி வருகிறது.