ஸ்ரீநகர்: காஷ்மீரில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இன்று மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
பஹல்காம் பகுதியில் நடந்த கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர், மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காஷ்மீரில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் மற்றும் சமூக அமைப்புகளும் தங்கள் கண்டனங்களை தெரிவித்தன.

தாக்குதலுக்கு எதிராக மக்கள் ஒன்றுகூடி குரல் கொடுப்பதற்காக இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. அனைத்து கட்சிகளும், வர்த்தக அமைப்புகளும் இந்த போராட்டத்திற்கு முழு ஆதரவை வழங்கியுள்ளன. இதன் விளைவாக மாநிலம் முழுவதும் கடைகள் மூடப்பட்டுள்ளன, வணிக நிறுவனங்கள் இயங்கவில்லை, முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பொதுமக்கள் வீடுகளுக்குள் இருந்து பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் அனைத்து முக்கிய பகுதிகளிலும் காவல் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. வர்த்தக சங்கத்தினர் இந்த போராட்டம் மனிதநேயத்திற்கு எதிரான தாக்குதலுக்கு எதிராக நடத்தப்படுவதால், மக்கள் ஆதரவு வழங்க வேண்டுமெனக் கூறினர்.
இந்நிலையில், ஸ்ரீநகரைச் சேர்ந்த ஆஷிக் ஹூசைன், பஹல்காமில் நடந்த தாக்குதல் மனிதநேயத்திற்கு எதிரானது எனக் கூறினார். இது சுற்றுலா துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், உலகளவில் காஷ்மீரின் பெயர் கெட்டுப் போகும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்தார். மக்கள் இதுபோன்ற தாக்குதல்களை உறுதியாக எதிர்க்க வேண்டும் என்றார்.