சென்னை: ஸ்விக்கி, ஸோமாட்டோ பணியாளர்களுக்கு நல்ல செய்தி… புத்தாண்டில் மழை தான். என்ன விஷயம் என்கிறீர்களா? விஷயம் இதுதான்.
ஸ்விக்கி, ஸோமாட்டோ போன்ற ஆன்லைன் செயலிகள் மூலம் டெலிவரி பணியாளர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுவிக்கப்பட்டது.
டெலிவரி பணியாளர்களின் பணிச் சூழலை மேம்படுத்தக் கோரியும், கூடுதல் வருவாயை அளிக்கக் கோரியும் இந்த நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது.
2026 புத்தாண்டு தினத்தையொட்டி, இந்த வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டதால் உணவு டெலிவரி மற்றும் விரைவாக நுகர்வு பொருட்களை டெலிவரி செய்யும் ஸோமாட்டோ, பிளிங்கிட், செப்டோ, ஸ்விக்கி மற்றும் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் போன்ற நிறுவனங்கள் கடும் பணியாளர் தட்டுப்பாட்டை சந்திக்க நேரிடும். இதனால் வாடிக்கையாளர்களுக்கு தக்க நேரத்தில் டெலிவரி செய்ய இயலாமல் போகலாம்.
ஸோமாட்டோ நிறுவனத்தை பொருத்தவரை இன்று மாலை 6 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணிவரையிலான டெலிவரியின் போது ஒரு ஆர்டருக்கு ரூ.120 முதல் ரூ.150 வரை வருவாய் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் டெலிவரி பணியாளர்கள் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கையை ஸோமாட்டோ எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, புத்தாண்டை முன்னிட்டு வாடிக்கையாளர் ஆர்டரை கேன்சல் செய்தாலோ அல்லது மறுத்தாலோ அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் ஸோமாட்டோ தெரிவிக்கிறது. ஆனால் இவை அனைத்தும் பண்டிகை தினங்களில், வருடக் கடைசி நாள்களில் வழக்கமாக செய்யக்கூடியவைதான் என்றும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
ஸோமாட்டோவை போல் ஸ்விக்கி நிறுவனமும் பணியாளர்களுக்கான ஊக்கத்தொகையை அதிகரித்துள்ளது. டிசம்பர் 31ஆம் தேதி மற்றும் ஜனவரி 1ஆம் தேதிகளில் டெலிவரி பணியாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை வருமானம் ஈட்ட வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தகவல்கள் கிடைக்கின்றன. இது ஆண்டின் வருடாந்திர நெறிமுறைகளில் ஒன்றாக கூறப்பட்டாலும், இந்நேரத்தில் டெலிவரி பணியாளர்களின் தரப்பில் வேலை நிறுத்தத்தை அறிவித்ததை தொடர்ந்தும் இந்த நடவடிக்கை விரைவுப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.