பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு மைசூருவில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சித்தராமையாவுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் சொந்த ஊரான மைசூரில், மைசூரு நகர்ப்புற வளர்ச்சி ஆணையமான “முடா’ சார்பில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் ரூ.4,000 கோடி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது. மைசூர் விஜயநகர் பகுதியில் முதல்வரின் மனைவி பார்வதிக்கு 14 மனைகள் ஒதுக்கப்பட்டன.
இதில், முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை சித்தராமையா மறுத்து வருகிறார். இந்த புகார் தொடர்பாக அவர் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குவது குறித்து சட்ட நிபுணர்களின் ஆலோசனையை கவர்னர் தவர்சந்த் கெலாட் கேட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த புகார் தொடர்பாக விளக்கம் கேட்டு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் சித்தராமையாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதற்கு சித்தராமையா இல்லாத அமைச்சரவை கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பின்னர், அமைச்சர்களுக்கு சித்தராமையா இரவு விருந்து அளித்தார்.
இந்த நோட்டீஸ் தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் சித்தராமையா ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் டெல்லியில் உள்ள சட்ட நிபுணர்களுடன் கவர்னர் ஆலோசனை நடத்தி வருகிறார். இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.