பெங்களூரு: இஸ்ரோவின் 4700 கிலோ எடை கொண்ட ஜிசாட் என்2 செயற்கைக்கோள் அமெரிக்காவில் இருந்து நாளை ஏவப்படுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) துணை நிறுவனமான நியூ ஸ்பேஸ் இந்தியா, தகவல் தொடர்பு சேவைகளை மேம்படுத்துவதற்காக ஜிசாட் என்2 செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. 4700 கிலோ எடை கொண்ட இந்த அதி நவீன செயற்கைக்கோளை அடுத்த வாரம் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் மூலம் அமெரிக்காவிலிருந்து விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
GSAT N2 செயற்கைக்கோள் அமெரிக்காவின் கேப் கேனவரல் ஏவுதளத்தில் இருந்து SpaceX இன் Falcon 9 ராக்கெட் மூலம் ஏவப்படும். இஸ்ரோவின் ராக்கெட் அதிகபட்சமாக 4,100 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள்களை மட்டுமே விண்ணில் செலுத்த முடியும் என்பதால் ஸ்பேஸ் எக்ஸ் மூலம் ஜிசாட் என்2 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்த செயற்கைகோளுடன் 32 பீம்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் வடகிழக்கு பகுதிகள் உட்பட இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் அதிவேக இணைய சேவையை பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிசாட் என்2 செயற்கைக்கோள் வணிக ரீதியாக ஏவப்படும் என்பதால் இந்த திட்டத்திற்கு ரூ.500 முதல் 600 கோடி வரை செலவாகும் என்றும், 14 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து ஜிசாட் என்2 அதிநவீன செயற்கைக்கோள் நாளை விண்ணில் செலுத்துவதற்கான கவுன்டவுன் இன்று காலை தொடங்கியது.