உத்தரகாண்ட்: உத்தரகாண்டில் மேகவெடிப்பால் கனமழை பெய்தது. இதில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டன.
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் இந்தியாவின் வட மாநிலங்களில் மேக வெடிப்பால் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் திடீரென கொட்டும் அதி கனமழையால் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டு கடுமையான பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இன்று அதிகாலை உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் மேகங்கள் திரண்டு மழை பெய்தது. அப்போது திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு சஹஸ்த்ரதாராவில் மிக கனமழை கொட்டியது.
இதனால் சாலைகளில் கடும் வெள்ளம் ஓடியது. அப்போது சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. அங்குள்ள கடைகளில் வெள்ளம் புகுந்து அடித்துச் செல்லப்பட்டன. சிறிய கட்டிடங்கள் பல மண்ணோடு புதைந்தன.
மேலும் அங்குள்ள ஐ.டி. பார்க் பகுதியிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கார்கள் மற்றும் கடைகள் வெள்ளத்தில் சிக்கியதில் 2 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.
முன்னதாக, பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள சாலையில் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி துண்டிக்கப்பட்டதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலையை விரைவில் திறக்க மாநில நிர்வாகம் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. டேராடூனில் மேக வெடிப்பைத் தொடர்ந்து ரிஷிகேஷில் உள்ள சந்திரபாகா நதியில் காலை முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரால் 3 பேர் ஆற்றில் சிக்கிக் கொண்டனர். அவர்களை பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டனர். இந்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், மாவட்ட நீதிபதி சவின் பன்சால், துணைப் பிரிவு நீதிபதி கும்கம் ஜோஷி மற்றும் பிற அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேதத்தை பார்வையிட்டனர். காணாமல் போனவர்களை விரைவில் தேடி மீட்குமாறு மீட்பு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
கனமழை மற்றும் மேக வெடிப்பு காரணமாக டேராடூனில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.