இந்தியாவின் பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கர்நாடகா, டில்லி, மும்பை, கேரளா மற்றும் மஹாராஷ்டிரா பகுதிகளில் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டில்லியில் இரண்டு பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகவும், மஹாராஷ்டிராவில் மின்னல் தாக்கி எட்டு பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடகாவில் மங்களூர், பம்ப்வெல், பிகர்னகட்டே உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. வெள்ளப்பெருக்கால் சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 110 முதல் 210 மிமீ வரை மழை பதிவாகியுள்ளது. மங்களூரில் மட்டும் 170 மிமீ மழை பெய்துள்ளதாக தகவல். உடுப்பி மாவட்டத்தில் 50 மிமீ அளவில் மழை பெய்துள்ளது.
டில்லியில் திடீர் வானிலை மாற்றம் காரணமாக பல இடங்களில் கனமழை பெய்தது. நரேலா, அலிப்பூர், டில்லி பல்கலைக்கழகம் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் சாய்ந்தன, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். மும்பையிலும் இரவு முழுவதும் இடி மின்னலுடன் மழை பெய்தது. சில இடங்களில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மஹாராஷ்டிரா, குஜராத் மற்றும் கேரளாவில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் ரத்னகிரி, ராய்காட் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் வெளியிட்டுள்ளது. கேரளாவின் மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் உள்ளிட்ட இடங்களில் ஜூன் 18 வரை கனமழை வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.