குஜராத்:குஜராத்தில் 3 நாட்களாக நீடிக்கும் கன மழையால் பாதிக்கப்பட்ட 2000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குஜராத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்துவரும் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.
2 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வதோதரா, சோட்டா உதேபூர், நர்மதா, பரூச், சூரத் உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் மழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.
குறிப்பாக வதோதரா நகரில் விஷ்வாமித்ரி ஆறு அபாய கட்டத்தை தாண்டி பாயும் நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை மீட்க ராணுவம் வரவழைக்கப்பட்டது.
வதோதரா நகரின் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அவற்றில் வசிப்போரை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர்.
இதனிடையே சவுராஷ்டிரா மற்றும் கட்ச்சை ஒட்டிய அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.