கொல்கத்தா: பெண் மருத்துவர் கொலை வழக்கு மேற்கு வங்க காவல்துறை விசாரணையில் திருப்தி அடையவில்லை எனக்கூறி இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி கல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவில் ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவம் படித்த பெண் மருத்துவர் (31) கடந்த 8ம் தேதி இரவு பணியில் இருந்தார். அதிகாலை 3 மணியளவில் கருத்தரங்க கூடத்தில் தூங்கிய இவர், கடந்த 9ஆம்தேதி அதிகாலை சடலமாக மீட்கப்பட்டார்.
பிரேத பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக, காவல் துறையில் பணியாற்றி வந்த சஞ்சய் ராய் (33) என்ற ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக பெண் மருத்துவரின் பெற்றோர் உட்பட பல்வேறு தரப்பினரால் கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் 5 பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சிவஞானம், நீதிபதி ஹிரண்மயி பட்டாச்சார்யா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் விகாஸ் பட்டாச்சார்யா, “சிட்பண்ட் ஊழல் வழக்கில் முக்கிய ஆதாரங்களை அப்போதைய போலீஸ் கமிஷனர் அழித்தார். பெண் மருத்துவர் விவகாரத்தில் ஆதாரங்களை அழிக்கவும் காவல்துறை முயற்சிக்கலாம். வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று வாதிட்டார். மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான வக்கீல் ஃபெரோஸ் கூறியதாவது: பெண் டாக்டர் கொலையை போலீசார் வெளிப்படைத்தன்மையுடனும், நேர்மையுடனும் விசாரித்து வருகின்றனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி சிவஞானம், “போலீசாரின் விசாரணையில் திருப்தி அடையவில்லை. கொலை நடந்து 5 நாட்களாகியும், முழு விவரங்களையும் போலீசாரால் தெரிவிக்க முடியவில்லை. தடயங்களை அழிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே, கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொல்லப்பட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உள்ளுறை மருத்துவ சங்கம் தலைமையில் மூத்த மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவசர சிகிச்சை அளிக்கும் பணியில் மட்டுமே மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், புறநோயாளிகள் பிரிவில் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். எய்ம்ஸ், ஆர்எம்எல் மருத்துவமனை, சப்தர்ஜங் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், டெல்லியில் கடந்த 2 நாட்களாக வெளிநோயாளிகளுக்கான சிகிச்சைப் பிரிவுகள் ஸ்தம்பித்தன.
மும்பை, நாக்பூர், மகாராஷ்டிராவில் நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் போராடி வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் சுமார் 200 இளம் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் அரசு மருத்துவமனையின் இன்டர்னிஸ்ட்களும் தர்ணாவில் பங்கேற்கின்றனர். இதனால் அவசர சிகிச்சை தவிர மருத்துவ சேவைகளும் இங்கு முடங்கியுள்ளன. நாடு முழுவதும் மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.