கொல்கத்தா: மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் குறித்து ஆதாரமற்ற மற்றும் அவதூறான கருத்துகளை கூறக்கூடாது என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு கல்கத்தா உயர் நீதிமன்ற பெஞ்ச் தடை விதித்துள்ளதுடன், பேச்சு சுதந்திரத்தின் கட்டமைப்பிற்குள் கருத்து தெரிவிக்கலாம் என உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சயந்திகா பானர்ஜி, ராயத் ஹுசைன் சர்க்கார் மற்றும் கட்சியின் நிர்வாகி குணால் கோஷ் ஆகியோர் மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸுக்கு எதிராக கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை கடந்த 16ம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணாராவ் விசாரித்து, “ஆகஸ்ட் 14ம் தேதி வரை கவர்னர் ஆனந்தபோஸ் மீது அவதூறு மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூற மம்தா உள்ளிட்ட 4 பேருக்கும் இடைக்கால தடை விதிக்கப்படுகிறது’’ என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு தடை கோரி மம்தா பானர்ஜி மற்றும் குணாஷ் கோஷ் ஆகியோர் கல்கத்தா உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்தனர்.
நீதிபதிகள் பிஸ்வரூப் சவுத்ரி மற்றும் ஐபி முகர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு: பொது வாழ்க்கை மற்றும் பேச்சு சுதந்திரத்தின் கடமையை மீறாமல், கவர்னர் ஆனந்த போஸ் குறித்து கருத்து தெரிவிக்க அனுமதிக்கப்படுகிறது. இல்லையெனில், மேல்முறையீடு செய்தவர்கள் பழிவாங்கல் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.