பீஜிங் நகரத்தில், இந்தியாவின் பாரம்பரியமான ஆயுர்வேத மருத்துவ முறையை கேரளத்தைச் சேர்ந்த டாக்டர் முகமது ஷபீக் மற்றும் அவரது மனைவி டாக்டர் டேன் ஆகியோர் வெற்றிகரமாக வளர்த்துவருகின்றனர். மூலிகை மருந்துகள், மசாஜ் சிகிச்சை, உணவுமுறை மற்றும் யோகா ஆகியவற்றைக் கொண்டது ஆயுர்வேதம். இந்தியர்களுக்குள் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் மக்கள் இந்த சிகிச்சையை நாடி வருகின்றனர்.

இத்தம்பதியினர், சீனாவின் பல பகுதிகளில் ஆயுர்வேத சிகிச்சையை வழங்குவதோடு, அதற்கான பயிற்சிகளையும் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, சிரோதரா எனப்படும், நெற்றியில் மெதுவாக எண்ணெய் சொட்டும் சிகிச்சை மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இது, ஆழ்ந்த மன அமைதியும், உடல் நலத்தையும் தரும் பரம்பரிய சிகிச்சையாகக் கருதப்படுகிறது. இந்த முறையை சீனர்கள் அறிந்து மகிழ்வதற்கு, இந்திய மற்றும் சீன மருத்துவ முறைகளுக்கு இடையிலான ஒற்றுமையே இதற்குக் காரணம் என்று ஷஃபிக் விளக்குகிறார்.
600 ஆண்டுகளுக்கு மேல் பாரம்பரியத்தை கொண்ட ‘சங்கம்பள்ளி குருக்கள்’ குடும்பத்தைச் சேர்ந்தவர் ஷபீக். புதுச்சேரியில் அவர் பயின்றபோது சீன நோயாளிகள் பெரிதும் ஆர்வம் காட்டியதைத் தொடர்ந்து, 2016ல் சீனாவில் மருத்துவமனையை தொடங்கினார். அவர்களின் சேவையை நாடி வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது பீஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் அவர்களின் பயிற்சி பெற்ற மாணவர்கள் ஆயுர்வேத சிகிச்சை மையங்களை நிறுவியுள்ளனர். இந்த சாதனை, இந்திய பாரம்பரிய மருத்துவத்தின் உலகளாவிய செல்வாக்கினையும், கேரள தம்பதியின் அர்ப்பணிப்பையும் வெளிக்காட்டுகிறது.