புதுடெல்லி: இந்தியா-அமெரிக்க இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் (பிடிஏ) பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் வரவேற்றுள்ளனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இரு நாட்டு குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்தவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த, பிடிஏ ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது. இதன் மூலம் இருதரப்பு வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலி ஒருங்கிணைப்பு சீராக இருக்கும். பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றத்தை பிரதமர் மோடி மற்றும் துணை ஜனாதிபதி வான்ஸ் ஆகியோர் சாதகமாக மதிப்பீடு செய்தனர். அதே நேரத்தில், எரிசக்தி, பாதுகாப்பு, மூலோபாய தொழில்நுட்பங்கள் மற்றும் பிற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்தியாவுடனான வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்க உதவும் நம்பிக்கையில் இந்தியாவிற்கான பாதுகாப்பு ஏற்றுமதியை அதிகரிக்க அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மீதான ஒத்துழைப்பும் பேச்சுவார்த்தையின் போது முக்கியமாகக் காணப்பட்டது. பேச்சுவார்த்தையின் போது, டிரம்ப் நிர்வாகத்தின் பரஸ்பர கட்டண அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியாவுடன் நியாயமான மற்றும் சமநிலையான வர்த்தக உறவைப் பேணுவதன் முக்கியத்துவத்தை வான்ஸ் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
இந்த ஆண்டு இறுதியில் இந்தியா நடத்தவுள்ள குவாட் உச்சி மாநாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பங்கேற்பதை ஆவலுடன் எதிர்ப்பார்ப்பதாக பிரதமர் மோடி கூறினார். இரு தலைவர்களும் உக்ரைன் மற்றும் காசா மோதல்கள் உட்பட பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர், இதன் போது பிரதமர் மோடி அனைவரையும் உள்ளடக்கிய அமைதி செயல்முறைக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார்.
பிரதமருடனான சந்திப்பைத் தொடர்ந்து, வான்ஸ், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் ஜெய்ப்பூருக்கு சுற்றுப்பயணமாக புறப்பட்டனர். இன்று காலை ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை பார்வையிட்ட அவர்கள் நாளை ஜெய்ப்பூர் திரும்புவார்கள். அவர்கள் நாளை அமெரிக்கா செல்லவுள்ளனர்.