சண்டிகர்: விவசாய பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 101 பேர் கொண்ட ஜோடி யாத்திரை டெல்லியை நோக்கி இன்று பிற்பகல் மீண்டும் தொடங்குகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு, ஹரியானா மாநிலம் அம்பாலா மாவட்டத்தில் உள்ள 12 கிராமங்களில் இணைய சேவைகள் மற்றும் மொத்த குறுஞ்செய்தி சேவைகளை டிசம்பர் 17-ம் தேதி வரை தடை செய்துள்ளது.
விவசாயிகள் குழு டெல்லிக்கு புறப்படும் என்று கிஷான் மஸ்தூர் மோர்சா (கேஎம்எம்) தலைவர் சர்வான் சிங் பந்தர் சனிக்கிழமை தெரிவித்திருந்தார். டிசம்பர் 6-ம் தேதிக்குப் பிறகு தலைநகர் டெல்லியை நோக்கி விவசாயிகள் பேரணியாகச் செல்வது இது மூன்றாவது முயற்சியாகும். முன்னதாக, டிசம்பர் 6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் விவசாயிகள் டெல்லிக்கு இரண்டு முறை செல்ல முயன்றனர். ஆனால், அவர்களை ஹரியானா போலீஸார் தடுத்து நிறுத்தி அனுமதிக்கவில்லை.
டெல்லி நோக்கி செல்லும் விவசாயிகளை தடுக்க ஹரியானா எல்லையில் பல தடுப்புகளை அம்மாநில போலீசார் அமைத்துள்ளனர். இதற்கிடையில், ஹரியானா கூடுதல் தலைமைச் செயலாளர் (உள்துறை) பொது ஒழுங்கை பராமரிக்க இணைய சேவைகள் மற்றும் மொத்த குறுஞ்செய்தி சேவைகளுக்கு தடை விதித்துள்ளார். பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் 163-வது பிரிவின் கீழ் அம்பாலா மாவட்டத்தில் ஏற்கனவே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு குழுவில் ஐந்து பேருக்கு மேல் கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.
டெல்லி நிர்வாகத்திடம் அனுமதி பெற்ற பிறகு விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி செல்லலாம் என்று ஹரியானா காவல்துறை ஏற்கனவே கூறியுள்ளது. சம்யுக்த கிஷன் மோர்சா (அரசியல் சார்பற்றது) மற்றும் கேஎம்எம் போன்ற விவசாயிகள் அமைப்புகள் தலைமையில், பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக மத்திய அரசு தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே, கனவுரி எல்லை அருகே சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லாவாலின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று 19-வது நாளை எட்டியுள்ளது. நீண்ட நேர உண்ணாவிரதத்தால் உடல் வலுவிழந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என மருத்துவர்கள் ஏற்கனவே கூறியுள்ளனர். இருப்பினும், மாநில அதிகாரிகளால் தல்லாவாலை நெருங்கி அவரை சம்பவ இடத்திலிருந்து அகற்ற முடியவில்லை, ஏனெனில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அவரைச் சுற்றி பாதுகாப்பு வளையத்தை அமைத்துள்ளனர்.
முன்னதாக, நவம்பர் 26-ம் தேதி, அவர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, போலீஸார் அவரை போராட்ட இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி பேரணியாக சென்ற விவசாயிகள் பஞ்சாப் மற்றும் ஹரியானா எல்லையில் உள்ள ஷம்பு மற்றும் கன்வாரி ஆகிய இடங்களில் தடுத்து நிறுத்தப்பட்டனர். பிப்ரவரி 13-ம் தேதி முதல் ஷம்பு மற்றும் கன்வாரியில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர்.