இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் எட்டாவது நாளாக தொடர்கின்றது. இந்த நிலையில், ஈரான் இஸ்ரேலின் அஷோர் நகரை நோக்கி தடை செய்யப்பட்ட கிளஸ்டர் ஏவுகணையை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது தொடர்பான தகவல் வெளிவந்து உள்ளது. இந்த ஏவுகணை வெடிக்கும்போது சிறு வெடிகுண்டுகள் பரவி தாக்கும் விதமுள்ளவை. சுமார் 8 கிலோமீட்டர் தொலைவிற்கு தாக்கம் ஏற்பட்டதாகவும், உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்றும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரண்டு நாடுகளும் போர் தீவிரப்படுத்தும் நிலையில் இவ்வாறு சர்ச்சைக்குரிய ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளமை உலக நாடுகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் எபி டெப்ரின், ஈரான் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், கிளஸ்டர் ஏவுகணையைப் பயன்படுத்தியதற்கு ஆயுதக் கட்டுப்பாட்டு சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டேரில் கிம்பால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கிளஸ்டர் ஏவுகணைகள் பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இதுபோன்ற தாக்குதல் தொடருமானால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு உலகின் 111 நாடுகள் இவ்வாயுதங்களை பயன்படுத்த தடை விதிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆனால் ஈரானும் இஸ்ரேலும் இதில் பங்கேற்கவில்லை.
இதற்குமுன் 2023ஆம் ஆண்டு ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் சூழலில் அமெரிக்கா வழங்கிய கிளஸ்டர் ஏவுகணையை உக்ரைன் பயன்படுத்தியது. அதற்குப் பதிலளித்து ரஷ்யாவும் அதே வகை ஏவுகணைகளை பாவித்தது. இதன் தொடர்ச்சியாக இந்த வகை ஆயுதங்கள் மீண்டும் சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.
இஸ்ரேல் மீது தாக்குதல்கள் தொடர்ந்தாலும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்பதும், இதற்கான தாக்கங்கள் அரசியல் மற்றும் மனித உரிமை கோணத்தில் கேள்வி எழுப்பும் வகையிலும் அமைந்துள்ளன. ஈரான் செய்த இந்த நடவடிக்கை இனி மேலும் பல நாடுகளின் கண்டனத்தையும் கவனத்தையும் பெற்றுக்கொள்ளும்.