ஆங்கில புத்தாண்டை இஸ்லாமியர்கள் கொண்டாடுவது தவறு என அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மௌலானா முப்தி ஷஹாபுதீன் ரிஸ்வி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்த உலாமாவான இவர், ஷரியா சட்டம் படித்து, ஃபத்வா வழங்கி வருகிறார். 2025-ம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாட இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் தயாராகி வரும் நிலையில், முஸ்லிம்கள் ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாட வேண்டுமா என்பது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
ஷரியா சட்டப்படி சட்ட விளக்கம் அளித்துள்ளார். ரிஸ்வி தனது ஃபத்வாவில், “ஜனவரி 1 புத்தாண்டு ஆங்கிலேயர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் பண்டிகை நாள். முஸ்லிம்கள் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது. இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவது ஷரியா சட்டப்படி குற்றம். இந்த கொண்டாட்டங்கள் அனைத்தும் கிறிஸ்தவ சடங்குகள். முஸ்லிம்கள் பிற மதத்தினரின் பண்டிகைகளைக் கொண்டாடுவதும், அதில் பங்கேற்பதும் ஷரியாவுக்கு எதிரானது. இது ஷரியாவில் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுகள் தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. அவற்றில், மது அருந்துதல், சூதாட்டம், ஆண்களும் பெண்களும் சேர்ந்து நடனமாடுவது போன்றவையும் அடங்கும். இதற்கெல்லாம் ஷரீஆவில் சிறிதும் இடம் கொடுக்கப்படவில்லை. எனவே, இதுபோன்ற நிகழ்ச்சிகளில் எந்த முஸ்லீம், ஆணோ, பெண்ணோ கலந்து கொண்டாலும், அவர்கள் பெரும் பாவம் செய்தவர்களாகவே கருதப்படுவார்கள்.
இந்நிலையில், மௌலானா ஷகாபுதீனுக்கு காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். செய்தி மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் பிரபலம் அடைய சிலர் இதுபோன்ற ஃபத்வாக்களை வெளியிடுவதை அவர்கள் விமர்சித்துள்ளனர்.