புதுடெல்லி: பெங்களூருவில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியை மினி பாகிஸ்தான் எனக்கூறி பெண் வழக்கறிஞரிடம் அநாகரீகமாக கருத்து தெரிவித்த விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷானந்தா மீதான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தொடங்கியது.
தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது. நீதிமன்ற நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பு நீதிமன்றத்தைத் தாண்டி பொதுமக்களை சென்றடைகிறது என்பதை வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றத்தில் உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நீதிபதி ஸ்ரீசானந்தா தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார். இதனால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பாமல் தவிர்த்துள்ளோம் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார்.
“இந்தியாவின் எந்தப் பகுதியையும் பாகிஸ்தான் என்று அடையாளப்படுத்தக்கூடாது, அதை அழைக்க யாருக்கும் உரிமை இல்லை. இது தேச ஒற்றுமைக்கு எதிரானது. சாதாரண கண்ணோட்டத்தில் பாலின அடிப்படையிலான கருத்துக்களை வெளிப்படுத்துவது சமூகத்தில் ஆணாதிக்க மற்றும் பெண் வெறுப்பு கருத்துக்களை பிரதிபலிக்கும் திறனைக் கொண்டுள்ளது.
எனவே ஒருவர் அதைப் பற்றி மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீதிமன்ற நடவடிக்கைகளை கண்காணிப்பதில் சமூக ஊடகங்கள் அதிக பங்கு வகிக்கும் நிலையில், நீதிபதிகளின் கருத்துகள் நீதிமன்றத்தின் கண்ணியத்துடன் ஒத்துப்போவது முக்கியம்.
கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷானந்தா மன்னிப்பு கோரியதாக கூறி அவருக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முடித்து வைத்தது.