பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். தமிழகத்துக்கு நாள் ஒன்றுக்கு ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மைக் குழு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா அவசர ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது சித்தராமையா கூறியதாவது: காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரையை அமல்படுத்த முடியாது. கர்நாடகா வற்புறுத்திய போதிலும், தண்ணீர் திறக்க பரிந்துரைத்துள்ளது.
காவிரி பாசன பகுதியில் 28 சதவீதம் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது. காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க வரும் 14ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது. கர்நாடகாவில் இருந்து மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் அழைக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.