பெங்களூரு: கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்விக்காக கர்நாடகாவின் 31 மாவட்டங்களிலும் உறைவிடப் பள்ளிகளை அமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடகாவில் கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை தேடி வேறு இடங்களுக்கு குடிபெயர்வதால், அவர்களின் குழந்தைகளின் கல்வி பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் உறைவிடப் பள்ளிகளைத் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதையடுத்து, கர்நாடக கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் இது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியது. இதற்கு பதிலளித்த முதலமைச்சர் சித்தராமையா, “கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக கர்நாடகாவின் 31 மாவட்டங்களிலும் உறைவிடப் பள்ளிகள் அமைக்கப்படும்.

கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, இதற்காக ரூ. 1,125 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ. 34 கோடி முதல் ரூ. 38 கோடி வரை செலவிடப்படும். கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இந்தப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்பட்டுள்ளது” என்றார்.