காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் நள்ளிரவில் எந்த தாக்குதலையும் நடத்தாததால், அந்தப் பகுதி இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. கடந்த சில நாட்களாக பாகிஸ்தானின் நள்ளிரவு மற்றும் அதிகாலை தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில், இரவில் ட்ரோன் அல்லது துப்பாக்கிச் சூடு தாக்குதல்கள் எதுவும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அக்னூர், ஃபிரோஸ்பூர், ரஜோரி, பூஞ்ச், ஜம்மு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. சனிக்கிழமை இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது, ஆனால் சில மணி நேரங்களுக்குள், பாகிஸ்தான் அதை மீறி எல்லையில் தாக்குதல் நடத்தியது.
போர் நிறுத்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களுக்குள், பாகிஸ்தான் அதை மீறி ஜம்மு காஷ்மீர் மற்றும் குஜராத்தில் உள்ள பல்வேறு இடங்களில் சனிக்கிழமை இரவு ஆளில்லா வான்வழி வாகனங்கள் (ட்ரோன்கள்) மூலம் தாக்குதல் நடத்தியது. அனைத்து பாகிஸ்தானிய ட்ரோன்களும் இந்திய வான் பாதுகாப்பு அமைப்பால் இடைமறித்து அழிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.