டெல்லி சட்டப் பேரவைத் தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தனது எக்ஸ் இணையதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கூறியதாவது:-
டெல்லி தேர்தலில் யாரும் சட்டத்தை மதிப்பதில்லை. பாஜக தலைவர்கள் சட்டத்துக்கோ, தலைமை தேர்தல் ஆணையத்திற்கோ பயப்படவில்லை. வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்களை வெளிப்படையாகவே வழங்கி வருகின்றனர். பணமும் மதுவும் தாராளமாக விநியோகிக்கப்படுகிறது. பாஜக தலைவர்களும் வாக்காளர்களுக்கு தங்கச் சங்கிலி உள்ளிட்ட பரிசுகளை வழங்கி வருகின்றனர்.

இவை அனைத்தும் கடந்த ஒன்றரை மாதங்களாக போலீசார் முன்னிலையில் நடந்து வருகிறது. வழக்கமாக, தேர்தலுக்கு முதல் நாள் இரவே இதுபோன்ற பணம், மது விநியோகம் நடைபெறுவது வழக்கம். ஆனால் டெல்லியில் கடந்த ஒன்றரை மாதங்களாக இதுபோன்ற பண விநியோகம் நடந்து வருகிறது. இதற்கு காவல்துறை முழு உடந்தையாக உள்ளது. விநியோகிக்கப்படும் பொருட்களுக்கு பாதுகாப்பாக இருப்பவர்கள் அவர்கள்தான்.
மேலும், பொருட்கள் வாங்க வரும் வாக்காளர்களை வரிசையில் நின்று ஒழுங்குபடுத்தி அனுப்பி வருகின்றனர். அதுமட்டுமின்றி, சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு மட்டுமே பொருட்கள் கிடைப்பதையும் உறுதி செய்து வருகின்றனர். அவர்கள் சட்டத்திற்கோ, தேர்தல் ஆணையத்திற்கோ பயப்படவில்லை. இது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக அமையும். கட்சிக்காரர்களுக்கு இந்தப் பணம் எங்கிருந்து வருகிறது? வாக்காளர்களை விலைக்கு வாங்குவதற்கு கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பது எப்படி?
ஊழல் செய்து மக்களிடம் இருந்து கொள்ளையடித்த இந்தப் பணத்தைத்தான் விநியோகிக்கிறார்கள் என்பதை வாக்காளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் வாக்காளர்களுக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். பணம், சாராயம், தங்க நகை என எதைக் கொடுத்தாலும் எடுத்துக் கொள்ளுங்கள்.
ஆனால் உங்கள் வாக்குகளை விற்காதீர்கள். உங்கள் பொன்னான வாக்குகளை ரூ.1,111 ரொக்கம், ஒரு சேலை, ஒரு போர்வை, ஒரு ஜோடி காலணிகளுக்காக விற்று விடாதீர்கள். உங்கள் வாக்குகள் விலைமதிப்பற்றவை. நீங்கள் விரும்பியவர்களுக்கு வாக்களியுங்கள். உங்கள் வாக்குகளை வாங்க முயல்பவர்களுக்கு வாக்களிக்காதீர்கள். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.