திருவனந்தபுரம்: காசர்கோட்டில் வீட்டின் மொட்டைமாடியில் சிறுத்தை நடமாடியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்
கேரள மாநிலம் வயநாடு, காசர்கோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் வனப்பகுதியை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளுக்குள் சிறுத்தை, புலி, காட்டுயானை உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி புகுந்து விடுகின்றன. இதனால் மலையோர கிராம மக்கள் அச்சத்துடனே வாழக்கூடிய நிலை நிலவுகிறது.
இந்தநிலையில் காசர்கோட்டில் ஊருக்குள் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. காசர்கோடு கல்லடசீட்டா பகுதியை சேர்ந்தவர் விகாஸ் நம்பியார். இவர் தனது குடும்பத்துடன் டெல்லியில் வசித்து வருகிறார்.
இதனால் கல்லடசீட்டாவில் உள்ள அவரது வீட்டை கிரிஷ் என்பவர் பராமரித்து வருகிறார். இந்தநிலையில் விகாஸ் நம்பியாரின் வீட்டில் பாதுகாப்புக்காக வளர்க்கப்பட்ட நாயை காணவில்லை. அதனை கிரிஷ் தேடியபோது சற்று தொலைவில் எஸ்டேட் பகுதியில் நாயின் ஒரு கால் பகுதி துண்டாக கிடந்தது.
ஏதே விலங்கு கொன்றிருப்பதை யூகித்த அவர், அதுபற்றி டெல்லியில் உள்ள விகாஸ் நம்பியாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அவர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகியிருந்த வீடியோவை டெல்லியில் இருந்தவாரே பார்த்தார்.
அப்போது ஒரு நாள் இரவில் சிறுத்தை ஒன்று நாய் இருந்த பகுதியில் நடந்து சென்றதும், அதற்கு மறுநாள் வீட்டின் மாடியில் சிறுத்தை நடமாடியபடி நின்றதும், மாடியில் இருந்து கீழே இருக்கும் நீச்சல் குளத்தை பார்த்துக்கொண்டு சிறுத்தை நின்றதும் பதிவாகியிருந்தது. இதனால் ஒரு சிறுத்தை தொடர்ந்து அந்த பகுதியில் நடமாடி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும் விகாஸ் நம்பியாரின் வீட்டில் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளும் வனத்துறையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதனடிப்படையில் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டு இருப்பதால் அந்த பகுதி மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.