பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா இன்று (பிப்ரவரி 26) நிறைவடைகிறது. இதுவரை, 63 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த புனித நிகழ்வில் பங்கேற்று புனித நீரில் நீராடி உள்ளனர்.
இன்று நிறைவு நாளில் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. முக்கியமான இடங்களில் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர் மற்றும் எந்தவித அசம்பாவித சம்பவமும் நடக்காமல் இருக்க பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு பிரயாக்ராஜ் முழுவதும் வாகனப் போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், மருத்துவர்கள், காவல்துறையினர் மற்றும் நிர்வாக அதிகாரிகள் போன்ற அத்தியாவசிய சேவை ஊழியர்கள் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள்.
பக்தர்கள் கூடும் இடங்களில் அதிகப்படியான நெரிசலைத் தடுக்க, அவர்கள் புனித நீராட வேண்டிய இடங்களுக்கு அருகில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இன்று கடைசி நாளாக இருப்பதால், ஏராளமான பக்தர்கள் புனித நீராட வருகிறார்கள்.