நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்த நிலையில், கேரளா அரசு முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மாநிலத்தின் பல பகுதிகளில் பொதுமக்கள் மாஸ்க் அணிந்து வெளியில் செல்லத் தொடங்கியுள்ளனர். கடந்த சில வாரங்களில் கேரளாவில் மட்டும் 182 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் கோட்டாயத்தில் 57 பேர், எர்ணாகுளத்தில் 34 பேர், திருவனந்தபுரத்தில் 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.காய்ச்சல், சளி, தொண்டை வலி போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் மாஸ்க் அணிய வேண்டும் என்று சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவுறுத்தியுள்ளார்.
மருத்துவமனைகள் செல்லும் பொதுமக்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள், இணை நோய்கள் உள்ளவர்கள், மருத்துவப் பணியாளர்கள் அனைவரும் அவசியமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்பதையும் அரசு வலியுறுத்தியுள்ளது.கர்நாடகா மற்றும் புதுச்சேரியிலும் கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.
சென்னை மருத்துவர்கள் தெரிவித்ததின்படி, தற்போது இன்ப்ளுயன்ஸா வைரஸை விட கொரோனா தொற்று அதிகமாகக் கண்டறியப்படுகிறது.இந்நிலையில், தமிழ்நாட்டில் மாஸ்க் கட்டாயம் என்று பரவும் செய்தி உண்மை அல்ல என்று பொதுசுகாதார இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற தகவல்களுக்கு பொது மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என்றும், நிலைமைக்கு ஏற்ப வழிகாட்டு நெறிமுறைகள் பிறப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.