ஐதராபாத் உருது பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பாக நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்வில் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும் ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:- இஸ்லாத்தின் பெயரால் பாகிஸ்தான் நமது நாட்டில் மரண ஹோமம் நடத்தி வருகிறது. பஹல்காமில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நமது நாட்டின் ராணுவம் இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.
இதில் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்பது உறுதி. நாம் இந்தியாவில் பிறந்தது கடவுளின் அருளால் மட்டுமே. புனித மாதத்தில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அப்பாவி மக்களைக் கொல்லும் பாகிஸ்தான், இஸ்லாம் என்று அழைக்கப்படுவதற்குக் கூட தகுதியற்றது. குழந்தைகளையும் அப்பாவி மக்களையும் கொல்ல இஸ்லாம் எங்கும் சொல்லவில்லை.

பாகிஸ்தான் பொய்களின் உருவகம். பாகிஸ்தான் பிரச்சினையில் இந்தியா பின்வாங்கக்கூடாது. இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் இந்திய நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக உள்ளனர். பாகிஸ்தான் இராணுவம் இந்தியாவில் பொதுமக்களையும் அப்பாவி மக்களையும் கொன்று வருகிறது. இதற்காக அவர்கள் நிச்சயமாக தகுந்த தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இவ்வாறு அசாதுதீன் ஒவைசி கூறினார்.