விவசாய உற்பத்தி மற்றும் அதன் விரிவாக்கத்தை மேம்படுத்தும் நோக்கில், மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம், சென்னை ஐஐடி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது, தகவல் தொழில்நுட்ப வசதிகளின் மூலம் விவசாய உற்பத்தி மற்றும் விவசாய விரிவாக்க முறைகளை மேம்படுத்தும் ‘விஸ்டார்’ என்ற புதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான முக்கிய அடுத்தடுத்த நடவடிக்கையாகும்.
இந்த திட்டத்தின் மூலம், விவசாயிகளுக்கு தேவையான தகவல்கள் எளிதாக, விரைவாக வழங்கப்படும். இப்போது, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் விவசாய சந்தையில் புதிய பொருட்கள் மற்றும் சேவைகளை கொண்டு வருவதுடன், விவசாயத் துறையில் தகவல் தொழில்நுட்ப வசதிகளின் பயன் பெற முடியும்.
சென்னை ஐஐடியின் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஆராய்ச்சி மைய இயக்குநர் ஏ. தில்லை ராஜன், மற்றும் மத்திய வேளாண் அமைச்சக இணை செயலர் சாமுவேல் பிரவீன் குமார் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம், விவசாய துறையில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் உதவியுடன், விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.