கோழிக்கோடு: கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். 6 மாவட்டங்களில் நிபா வைரஸ் தொற்றைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு மற்றும் திருச்சூர் ஆகிய இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 57 வயது நபர் கடந்த 12-ம் தேதி இறந்தார். இதைத் தொடர்ந்து, இறந்த நபருக்கு நிபா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அவரிடமிருந்து முன்னர் சேகரிக்கப்பட்ட இரத்த மாதிரி மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. சோதனையில் அவருக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம், கடந்த சில நாட்களில் கேரளாவில் நிபா வைரஸ் தொற்று காரணமாக இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளார். இறந்த நபருடன் தொடர்பில் இருந்தவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் சுகாதாரத் துறை ஈடுபட்டுள்ளது. இதன் அடிப்படையில், சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் தொடர்புகளின் அடிப்படையில் 46 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
இந்த சூழ்நிலையில், மலப்புரம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மருத்துவமனைகளுக்கு தேவையற்ற வருகைகளைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். நிபா வைரஸ் அறிகுறிகள் மற்றும் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் விவரங்களை வழங்க சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் நிபா வைரஸ் தொற்றைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.